Monday, December 7, 2009

தமிழர்களுக்கு தேசியம் போதும். தேசிய கட்சிகள் வேண்டாம்.

தேசிய கட்சிகள் என்பன இன்னமும் பெரும்பாலும் வட மாநில குறிப்பாக இந்தி பேசும் மாநில தலைவர்களின் ஆதிக்கத்தில்தான் இயங்கி வருகின்றன.
மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை அவை எந்த அளவு மதித்து நடக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.
மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதுவும் கானல் நீராகவே நீடிக்கிறது.
இன்று எந்த தேசிய கட்சி நாங்கள் முழுமையாக மாநில உணர்வுகளை மதித்து நடக்கிறோம் என்று மார் தட்டி சொல்ல முடியும்?
அப்படி நடக்க முற்பட்டால் தேசியம் அழிந்து விடும் என்று அஞ்சுகிறார்கள்.
மாநில உணர்வுகளை நசுக்குவதாலேயே தேசியத்தை வாழ வைக்க முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
ஒரு தலைவர் நான் மேடையில் இருக்கும்போதே பேசினார்.
" இட்டிலியும் தோசையும் நான் வடிவிழக்க மாட்டேன் என்று நினைத்தால் நாம் உயிர் வாழ முடியுமா? "
ஆக இவர்களுக்கு மாநில உணர்வுகள் என்பன வடிவிழந்து சிதைந்து தேசியம் என்ற உடலை வாழ வைக்க வேண்டிய உணவுகள் .
இவர்களால் தேசியத்தையும் நிலைக்க வைக்க முடியாது. மாநில உணர்வுகளை காக்கவும் முடியாது.
இவர்கள்தான் தேசியத்தின் எதிரிகள்.
பன்மையில் ஒருமைத்தன்மை என்பதை ( Unity in diversity ) தவறாக புரிந்து கொண்டிருப்பவர்கள்.
பன்மையை ஒப்புக்கொள்ளாமல் ஒற்றுமை என்பது இருக்க முடியாது என்பதை மறந்தவர்கள்.
பாரதத்தாய் மட்டுமே ஏற்றுகொள்ள தக்கது மற்ற வங்காளி, மராட்டிய , தெலுங்கு, கன்னட, பஞ்சாபி, மலையாள,தமிழ்த் தாய்களை ஏற்று கொள்ள மாட்டோம் என்று அறிவித்துவிட்டு தேசியத்தை காக்கமுடியும் என்று எப்படி அவர்கள் நம்புகிறார்கள்?
பாரத தாயின் மகள்களாக ஏனைய மாநில தாய்கள் இருக்க முடியுமே?
இரக்கமே இல்லாமல் இலங்கையில் ஒரு விடுதலை போராட்டத்தை தற்காலிகமாக முடக்கியதில் , ஒரு மாபெரும் மனித பேரவலத்தை நடத்தி முடித்ததில் , தமிழர்களை கொன்று ஒழித்ததில் , இந்தியம் வெற்றி பெற்றிருக்கிறது.
ஒரே ஒரு திருப்தி மட்டுமே எஞ்சியிருக்கிறது. இந்தியா இன்னமும் ஜனநாயக நாடாக நீடிக்கிறது.
பாராளுமன்றத்தில் நாம் நமது குறைகளை பேச முடியும். இந்த அவைதான் பாரத ஒற்றுமையை கட்டி காத்து வருகிறது.
அமைச்சர்கள் மாநில மொழிகளில் பேச முடியாது என்று இருக்கும் நிலை போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும் அவைகள் எல்லாம் சரி செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
இன்றைய நிலையில் தேசிய கட்சிகள் என்பன மாநில மக்களின் மனசாட்சியை விட்டு வெகு தூரம் விலகியே நிற்கின்றன.
எனவே நாமும் அவைகளை விட்டு விலகி நிற்பதில் தவறில்லை.
தமிழர்களுக்கு தேசியம் போதும். தேசிய கட்சிகள் தேவை இல்லை.
முதலில் தமிழ் தமிழர் உணர்வுகள் பற்றி பேசுபவர்கள் தேசிய கட்சிகளை விட்டு வெளியேற வேண்டும்.
நம்மில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
தி.மு.க. - ஆ தி. மு. க. - பா. ம. க. - தே. மு, தி. க. - ம.தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள்- புதிய தமிழகம்., என்று பல்வேறு கட்சிகள் இயங்கி வருகின்றன.
எல்லார் மீதும் ஏதாவது குறை இருக்கலாம். குறைகளே இல்லாத கட்சி என்று ஏதுமில்லை.
குற்றங்களோடு மாற்றாரை ஏற்பதற்கு பதில் குறைகளோடு நம்மவர்களை ஏற்போமே . ஏனெனில் அவர்கள் நம்மவர்கள். .
நம்மவர்களை திருத்துவோமே. தேசியவாதிகள் திருந்தும்வரை.
தமிழர்களே, தேசிய கட்சிகளை விட்டு வெளியேறுங்கள். - இதுதான் இன்றைக்கு தேவையான முழக்கம்.
நாளை இதே முழக்கத்தை மற்ற மாநிலங்களிலும் கேட்க முடியும்.
தமிழர்களுக்கு,, தேசியம் போதும். தேசிய கட்சிகள் வேண்டாம்.

No comments:

Post a Comment