Wednesday, August 11, 2010

neerupoosum naal varuma?

நீறு பூசும் நாள் வருமா?

சென்ற ஆண்டு மே பதினெட்டில் அந்த கொடூர செய்தி,  முள்ளி வாய்க்கால் அவலம், காதில் விழுந்த கணமே செயலற்று விழுந்தேன்.     ஓராண்டு முடிந்தும் அந்த உணர்வை மறக்க முடியவில்லை.   ஆம் .    மறக்க கூடாது என்பதற்காகவே அந்த முடிவை எடுத்தேன்.
நாள்தோறும் காலையில் இறைவனை வணங்கும்போது திருநீறு இட்டுக்கொள்வது சிறுவயதிலிருந்தே பழகிப் போன ஒன்று. 
இறைவன் மீது வந்த கோபத்தில் நீறு பூசவே தோன்றவில்லை.    பூசவே கூடாது என்று முடிவெடுத்தேன்.   ஆம் .   வணங்கினால் போதும். அது கடமை. இறைவன் கோபித்துக்கொள்ள மாட்டான். கோபித்துக் கொண்டாலும் சரி. உன்னை வணங்குவேனே தவிர நீறு பூச மாட்டேன்.
எனக்குத்தான் இழப்பு.     ஆற்றிடம் கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் வந்தால் யாருக்கு நட்டம்?     தெரிந்த பழமொழிதான்.     பாலைவனத்தில் மணலைத் தானே பயன் படுத்துகிறார்கள்.      ஐரோப்பாவில் தண்ணீர் கிடைத்தாலும் பேப்பரைத் தானே பயன் படுத்துகிறார்கள்.
ஆனாலும் எனக்கு தினமும் அது நினைவுக்கு வர வேண்டும் .
அந்த நினைவு எனக்கு தியாகம் வீரம் மானம் சுதந்திரம் என்பனவற்றிற்கு பொருள் தருகிறது. சமுதாயதிற்காக நான் என்ன செய்தேன் என்ற கேள்வியை அது எழுப்புகிறது.     
சும்மா வராது சுதந்திரம் .   இன்னும் எத்தனையோ நாடுகளில் மக்கள்   சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.       அடக்கு முறையையும் சர்வாதிகாரத்தையும் எதிர் கொண்டுதான் இருக்கிறார்கள்.   ஒருநாள் வெற்றி பெற்றே தீருவார்கள்.   அதேபோல் இலங்கையிலும் ஈழம் மலரும்.   அந்த நாளுக்காக காத்திருப்பதை தவிர வேறு வழி எனக்கு இல்லை.
அன்று வேடிக்கை பார்த்த உலகம் என்றைக்கும் அப்படியே இருந்துவிடாது என்பதற்கு உதாரணமாக இன்று அமெரிக்காவில் ஐம்பத்து ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசுக்கு எதிராக போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று ஒபாமா அரசை வலியுறுத்தி அந்நாட்டு வெளி உறவுத்துறை அமைச்சர்  ஹிலரி கிளின்டனிடம் மனு கொடுத்துள்ளர்கள்.
நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்காதிர்கள். அவர்களுக்கு கட்சி என்ன சொல்கிறதோ அதை கேட்பது மட்டுமே வேலை. சொந்தமாக சிந்தித்து செயல்படுகிற பாராளுமன்ற உறுப்பினர் யாராவது இருந்தால் சொல்லுங்களேன்.
கச்சத் தீவை யாரையும் கேட்காமல் வாரிக் கொடுத்துவிட்டு இன்று ஒப்பந்தத்தை எப்படி மீறுவது என்று கேட்கிறார் நமது வெளி உறவுத்துறை அமைச்சர்.
இந்திய தமிழ் மீனவர்கள் ஐநூறு பேரை சிங்களவர்கள் கொன்று குவித்தது இந்தியாவையும் அதன் ஆட்சியாளர்களையும் கொஞ்சம் கூட சலனப்படுத்தவில்லை.
கச்சதீவு நம்முடையதாகவே நீடித்திருந்தால் மீன்பிடி உரிமையின் கடல் எல்லை விரிவடைந்திருக்கும்.     குற்றத்தையும் இழைத்து விட்டு இன்று பாதிக்கப் பட்டவர்களை குற்றம் சாட்டுகிறது இந்திய அரசு.   
இறைவனும், உலகும் , நீதியும் கைவிடாது என்பது உறுதி.   நியாயம் கிடைக்கும்போது இறைவா உன் பேரருளோடு அன்று பூசுகிறேன் திருநீறு.   அந்த நாள் விரைவில் வர அருள் புரிவாயா?