Saturday, October 2, 2010

thanmana bhakthar peravai

தன்மான பக்தர் பேரவை
ஏசுவின் போதனைகளை ஏற்றுக் கொண்டால் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமா?
நபிகள் நாயகத்தின் வழி காட்டுதலில் குரான் சொல்லும் கருத்துக்களில் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கூட ஒருவன்  முஸ்லிம்  ஆக வேண்டுமா?
இன்னும் பெரும்பாலான மதங்களில் அதன் சாரத்தை ஏற்றுக்கொள்வதற்கு கூட  அதனை பின் பற்றுபவராக  அடையாள  படுத்திக் கொள்கிறவராக இருக்க வேண்டும் என்பது மரபாகி விட்டது. இது சரியா?
மதத்தோடு அடையாள படுத்திகொள்கிறவர்கள் தங்களின் தன்மானம் பற்றி கவலைப் படாதவர்கள் .
எனது கேள்வியெல்லாம் கடவுள் நம்பிக்கைக்கும் கடவுளின் பேரால் நிறுவனமாக்கப் பட்டிருக்கும் மதங்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான்.?
எல்லா வழிபாடு முறைகளையும் ஏற்றுக்கொள்ளும் இந்தியாவில் உருவான பல்வேறு வகை சமயங்களும் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ள ' இந்து' என்ற சொல்லை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி நிற்கின்றன.
ஆனால் இந்த சமய நிறுவனங்களில் பக்தனின் தன்மானம் விலை பேசப் படுகிறதே என்று எந்த பக்தனும் கவலைப் படுவதில்லையே ஏன்?
பெயர் வைப்பதில் தொடங்குகிறது அடிமைத்தனம்.
நான் கிறிஸ்தவன் , முஸ்லிம், இந்து, சீக்கியர், என்று பெயரிலேயே காட்டிவிடுகிறோம்.
கடவுள் நம்பிக்கையை பெயரில் காட்டக்கூடாது என்று சர்வதேச மரபு இருக்குமானால் மத வெறுப்பு மறைந்தே போகும்.
எல்லா மதங்களுமே நல்லதைத்தான் சொல்கின்றன என்ற உண்மை வெளிப்படும்.
மக்களை இறைவனுக்கு அருகில் கொண்டு செல்ல துடிக்கும் மதங்கள் தான் உலகில் பெரும்பாலான பிரச்சினை களுக்கு காரணமாக இருக்கின்றன.
சரி. மற்றவர்கள் இருக்கட்டும். தமிழ் நாட்டில் பக்தர்கள் எப்படி நடந்து
கொள்கிறார்கள்.அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று
சட்டம் கொண்டு வரப்பட்டது . அரசு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை தொடங்கி
எல்லா சாதிக்காரர்களையும் உள்ளடக்கி இரு நூற்று மாணவர்களுக்கு பயிற்சி
கொடுத்தது.  இவர்கள் தொட்டால் சாமி ஓடிவிடும் என்று சொல்லி பிராமணர்கள்
உச்ச நீதி மன்றம் சென்று தடை வாங்கினார்கள். வேலை கொடுக்க முடியாததால்
அரசு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மூடிவிட்டது.
தங்கள் சாதி பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை பணியில் நியமிக்க விடாமல்
சதி செய்யும் உயர்ந்த சாதி அர்ச்சகர்கள் மேல் ஏன் பக்தர்களுக்கு கோபம் வர வில்லை.?    அதாவது தங்கள் சாதி அர்ச்சகர்கள் பூசை செய்தால் நாங்கள் வர மாட்டோம் என்று பிற சாதியினர் சொல்லுகிறர்களா?  அப்படி சொல்லித்தான் உச்ச
நீதி மன்றத்தில் தடை வாங்கியிருக்கிறார்கள்.
எதைப் பற்றியும் கவலைப் படாத பக்தர்கள் இருக்கும் வரை எந்த சீர்திருத்தத்தை அமுல் படுத்த முடியும்?
உச்ச நீதிமன்ற  தடையாணையை நீக்க தமிழ் நாட்டு அரசு முயற்சி
எடுப்பதற்குள் அடுத்த தேர்தல் வந்து விடும்.  அரசு கொண்டு வந்த நல்ல
சட்டத்தை அமுல் படுத்த முடியாமல் தடுக்கும் சதிகாரர்களுக்கு எதிராக
பக்தர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் தடையும் நீக்கப்ப் பட்டிருக்கும்.
தமிழும் தமிழர்களும் கருவறைக்குள் நுழைந்திருப்பார்கள்.
இப்போது சொல்லுங்கள் . பக்தர்களுக்கு தன்மானம் இருக்கிறதா?
இருந்திருந்தால் சட்டத்தை எதிர்ப்போரிடம்  அர்ச்சனை செய்யும் படி
கேட்கமாட்டோம் என்று முடிவெடுதிருப்பார்கள்.
இறைவனை மட்டும் தரிசித்து விட்டு அர்ச்சகர்களை இவர்கள்
தவிர்த்திருப்பார்கள்.
எனக்குத் தெரிந்து பல மாவட்டங்களில் முன்பு சுயமரியாதை
திருமணங்கள் செய்தவைகள் கூட இப்போது வைதீக திருமணம் செய்கிறார்கள்.
ஏன் தெரியுமா?     இப்போதெல்லாம்  புரோகிதர்கள் தமிழிலேயே திருமண
மந்திரங்களை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.   புரியாத மொழியில்
சொல்லி மக்கள் புறக்கணிக்க தொடங்கியதன் விளைவு இப்போது
தமிழில் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.   அதேபோல்  கோயிலிலும் தமிழில்
அர்ச்சனை சொல்லாத அர்ச்சகர்களை பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்.
அப்போது மட்டும்தான் அவர்களுக்கு உரைக்கும்.  
நம்பிக்கையின் பேரால் அடிமைத்தனத்தை வளர்க்க வேண்டாம்.

Thursday, September 30, 2010

திருப்பு முனை தந்திடும் தீர்ப்பு நாள்
இன்னும் அரை மணி நேரத்தில் தீர்ப்பு வந்திடும்
மசூதி வரவேண்டும் என்றால் பா ஜ க மீண்டும் ஆட்சிக்கு வரும்
கோயில் வரவேண்டும் என்றால் பயங்கரவாத தாக்குதல் அதிகரிக்கும்
நியாயம் இந்துக்கள் பக்கமும் சட்டம் முஸ்லிம்கள் பக்கமும் இருக்கலாம்.
இப்போதைக்கு ஓயாது இந்த பிரச்சினை . உச்ச நீதிமன்றம் எத்தனை ஆண்டுகள்
எடுத்துக்கொள்ளுமோ?
தீர்ப்பை விவாதிக்க நாடு தயாராகட்டும் .   எல்லா தரப்பு வாதங்களுக்கும்
தீர்ப்பில் பதில் கிடைக்கும் என்று நம்புவோம். 
வன்முறையை தூண்டுவோர் அடக்கப் படவேண்டும்.
ஒருகோயிலில் ராமரை அடக்கி வைக்க முடியாது. அதேபோல் ஒரு
பள்ளிவாசலில் அல்லாவை முடக்கி விடவும் முடியாது.
இந்த இரண்டையும் நம்பி இருவரும் இல்லை.
இவர்களை வைத்து அரசியல் செய்வோர்தான் குற்றம் செய்தவர்கள் ஆவார்கள்.
அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவே இந்த தீர்ப்பு பயன்படும்.

Wednesday, August 11, 2010

neerupoosum naal varuma?

நீறு பூசும் நாள் வருமா?

சென்ற ஆண்டு மே பதினெட்டில் அந்த கொடூர செய்தி,  முள்ளி வாய்க்கால் அவலம், காதில் விழுந்த கணமே செயலற்று விழுந்தேன்.     ஓராண்டு முடிந்தும் அந்த உணர்வை மறக்க முடியவில்லை.   ஆம் .    மறக்க கூடாது என்பதற்காகவே அந்த முடிவை எடுத்தேன்.
நாள்தோறும் காலையில் இறைவனை வணங்கும்போது திருநீறு இட்டுக்கொள்வது சிறுவயதிலிருந்தே பழகிப் போன ஒன்று. 
இறைவன் மீது வந்த கோபத்தில் நீறு பூசவே தோன்றவில்லை.    பூசவே கூடாது என்று முடிவெடுத்தேன்.   ஆம் .   வணங்கினால் போதும். அது கடமை. இறைவன் கோபித்துக்கொள்ள மாட்டான். கோபித்துக் கொண்டாலும் சரி. உன்னை வணங்குவேனே தவிர நீறு பூச மாட்டேன்.
எனக்குத்தான் இழப்பு.     ஆற்றிடம் கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் வந்தால் யாருக்கு நட்டம்?     தெரிந்த பழமொழிதான்.     பாலைவனத்தில் மணலைத் தானே பயன் படுத்துகிறார்கள்.      ஐரோப்பாவில் தண்ணீர் கிடைத்தாலும் பேப்பரைத் தானே பயன் படுத்துகிறார்கள்.
ஆனாலும் எனக்கு தினமும் அது நினைவுக்கு வர வேண்டும் .
அந்த நினைவு எனக்கு தியாகம் வீரம் மானம் சுதந்திரம் என்பனவற்றிற்கு பொருள் தருகிறது. சமுதாயதிற்காக நான் என்ன செய்தேன் என்ற கேள்வியை அது எழுப்புகிறது.     
சும்மா வராது சுதந்திரம் .   இன்னும் எத்தனையோ நாடுகளில் மக்கள்   சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.       அடக்கு முறையையும் சர்வாதிகாரத்தையும் எதிர் கொண்டுதான் இருக்கிறார்கள்.   ஒருநாள் வெற்றி பெற்றே தீருவார்கள்.   அதேபோல் இலங்கையிலும் ஈழம் மலரும்.   அந்த நாளுக்காக காத்திருப்பதை தவிர வேறு வழி எனக்கு இல்லை.
அன்று வேடிக்கை பார்த்த உலகம் என்றைக்கும் அப்படியே இருந்துவிடாது என்பதற்கு உதாரணமாக இன்று அமெரிக்காவில் ஐம்பத்து ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசுக்கு எதிராக போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று ஒபாமா அரசை வலியுறுத்தி அந்நாட்டு வெளி உறவுத்துறை அமைச்சர்  ஹிலரி கிளின்டனிடம் மனு கொடுத்துள்ளர்கள்.
நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்காதிர்கள். அவர்களுக்கு கட்சி என்ன சொல்கிறதோ அதை கேட்பது மட்டுமே வேலை. சொந்தமாக சிந்தித்து செயல்படுகிற பாராளுமன்ற உறுப்பினர் யாராவது இருந்தால் சொல்லுங்களேன்.
கச்சத் தீவை யாரையும் கேட்காமல் வாரிக் கொடுத்துவிட்டு இன்று ஒப்பந்தத்தை எப்படி மீறுவது என்று கேட்கிறார் நமது வெளி உறவுத்துறை அமைச்சர்.
இந்திய தமிழ் மீனவர்கள் ஐநூறு பேரை சிங்களவர்கள் கொன்று குவித்தது இந்தியாவையும் அதன் ஆட்சியாளர்களையும் கொஞ்சம் கூட சலனப்படுத்தவில்லை.
கச்சதீவு நம்முடையதாகவே நீடித்திருந்தால் மீன்பிடி உரிமையின் கடல் எல்லை விரிவடைந்திருக்கும்.     குற்றத்தையும் இழைத்து விட்டு இன்று பாதிக்கப் பட்டவர்களை குற்றம் சாட்டுகிறது இந்திய அரசு.   
இறைவனும், உலகும் , நீதியும் கைவிடாது என்பது உறுதி.   நியாயம் கிடைக்கும்போது இறைவா உன் பேரருளோடு அன்று பூசுகிறேன் திருநீறு.   அந்த நாள் விரைவில் வர அருள் புரிவாயா?

Tuesday, January 5, 2010

தனி ஈழத்தை   ஆதரிக்கும்வரை சோனியா  காங்கிரசே   தமிழர்களின் எதிரி
.
கடந்த     ஆண்டு டிசெம்பர் இருபத்து ஏழாம் தேதி தஞ்சையில்
 தமிழ் அரசி திருமண மண்டபத்தில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பு நடத்திய மாநாடு திரு பழ நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடந்தது
.
இந்து தமிழர்  இயக்க சார்பாக நான் கலந்து கொண்டேன்.

 இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைதான் விவாதப்பொருள். அநேகமாக அனைவரது கருத்துக்களும் எதிரியாக சோனியா, ராகுல், பிரியங்கா இவர்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்திய அரசும் , துரோகியாக கலைஞர் கருணாநிதியின் அரசும் அடையாளப் படுத்தப் பட்டுக் காட்டப்பட்டன.

 இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழகத்தில் பொங்கிக் கொண்டிருந்த இந்திய அரசு எதிர்ப்பு அலைகளை தனது சாதுரியத்தால் அமைதிப் படுத்திவிட்டார் என்பதுதான் கலைஞர் மீதான குற்றச்சாட்டு.

கலைஞர் கட்டுப் படுத்தாமல் விட்டிருந்தால் ,தமிழகத்தில் கலவரம் வெடித்து , இந்திய அரசு தலை வணங்கி முள்ளி வாய்க்கால் அவலத்தை தடுத்திருக்கும்  என்பது இவர்களின் நம்பிக்கை.

எல்லாரது குற்றச்சாட்டும் சோனியா மத்திய அரசை பயன்படுத்தி பழி வாங்கிவிட்டார் என்பதாக இருக்கும்போது  தன்னை நம்பி இருக்கும் சிறுபான்மை மாநில அரசு தனக்கு எதிராக போகுமேயானால் , ஆதரவளிக்க காத்துக் கிடக்கும் ஜே போன்ற சக்திகளை பயன்படுத்தி தன் இலட்சியத்தை நிறைவேற்றி இருப்பாரா அல்லது  தமிழ் நாட்டு கலவரத்திற்கு பயந்து பழி வாங்குதலை நிறுத்தி இருப்பாரா?

வைகோவுக்கு முன்னர் நான் பேசும்போது  கீழ்க்கண்ட கருத்துக்களை குறிப்பிட்டேன்.

ஒவ்வொரு தமிழன் வீட்டிலும்     " தமிழ்த் தாயின் தலைமகன்  " என்ற பெயருடன்
 பிரபாகரன் படம் இடம்பெற வேண்டும்.  வீரம், உறுதி , கொள்கையில் பிறழாமை, தளராத நம்பிக்கை, தாய்நாட்டுப் பற்று , சுய ஒழுக்கம், நாட்டுக்காக குடும்ப பாசம் அறுத்தல் , என்ற குணங்களின் மொத்த  உருவமாக அவர் எதிர்காலத் தலைமுறைக்கு அடையாளம் காட்டப்படுவார்.

ஒவ்வொரு தமிழ் குடும்பமும் " ஈழ உண்டியல்" வைத்துக் கொண்டு பழ. நெடுமாறன் போன்றோர் கேட்கும்போது உதவ வேண்டும்.

இறுதியாக   இலங்கைத் தமிழர்  போராட்டம் பின்னடைவிற்கு  சோனியா
 கும்பலே காரணம். எனவே அவர்களே தமிழர்களின் முதல் எதிரி என அறிவிக்க வேண்டும்.
எனவே இனி எதிர்காலத்தில் எந்தக் காரணம் கொண்டும் சோனியா காங்கிரசோடு ஓட்டோ  உறவோ எங்களுக்கு இருக்காது என்று தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி பேசும்
கட்சிகள் அறிவிக்க வேண்டும்.

அப்படி அறிவிக்காமல் , எதிரியை அடையாளம் காட்டாமல் ,
ஈழத்தில் அக்கறை காட்டி பேசுவது, எந்த விதத்திலும் பயனளிக்காது.

மாநாட்டை  விட்டு வெளியே வரும்போது மனம் ஒரு நிலையில்  இல்லை.

அழிவின் விளிம்பில் ஈழத்தமிழர்கள் ரத்தம் சிந்திக் கொண்டிருந்தபோது    
தமிழகத்தில் நிலவிய மயான அமைதிக்கு எல்லாரும்தான்
பொறுப்பேற்க வேண்டும்.    அதிலே முதல்வர் கலைஞருக்கு முதல் பொறுப்பு.

பெரும்பாலான மதங்கள் பிராயச்சித்தம் செய்வதை ஏற்றுக் கொள்கின்றன.
காங்கிரசுக்கும் ஒன்று உண்டு.  தான் செய்த பாவத்துக்கு பரிகாரமாக
தனி ஈழம் உருவாக உதவுவோம் என்று அறிவிக்க வேண்டும். அதற்கு முதல் படியாக இந்திய அரசின் வெளி நாட்டு கொள்கையில் மாற்றத்தை அது அறிவிக்க வேண்டும்.

 இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்காமல் தமிழர் பிரச்னைக்கு தீர்வு என்பதுதான் பெரும்பாலான  அகில இந்திய கட்சிகளின் நிலைப்பாடு.
எனவே   தனி ஈழ ஆதரவை   காங்கிரஸ் அறிவிக்காத வரை தமிழர்களின் எதிரி காங்கிரஸ் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கக் கூடாது.

காங்கிரசோடு    கூட்டு சேர தயாராக இருப்பவர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்து விட்டார் என்று குற்றம் சாட்ட எந்த தகுதியும் இருக்காது. அதில் ஜே- க்குத்தான் முதல் இடம்.    தேர்தலின்போது  தனி ஈழம் பெற்றுத் தர மத்திய அரசு மூலமாக ராணுவத்தை அனுப்புவேன் என்று முழங்கியவர் , இன்றுவரை அவலம் தொடரும் நிலையில் அமைதி காப்பது ஏன்?   அக்கறை தேர்தலோடு போய்விட்டதா?    இன்று வரை பிரபாகரன் பற்றி ஒரு வார்த்தையாவது போற்றிப் பேசியது உண்டா?   

கலைஞர் செய்த தவறுகளை சுட்டிக் காட்டகூடாது என்று யாரும் சொல்லவில்லை.
மற்றவர்கள் செய்த தவறுகளையும் நினைத்தாவது பார்க்க வேண்டாமா ?

நான் பெரிதும் மதிக்கும் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள் இந்திய அரசின்
துரோகத்தை சுட்டிக்,காட்டிய பிறகும் கடைசி வரை மத்திய அமைச்சரவையில்
அன்புமணி ஒட்டிக்கொண்டிருந்ததை தவறு என்று ஒப்புக் கொள்ள வேண்டாமா ?

எந்தப் போராட்டத்திலும் சூழ்ச்சியும் துரோகமும்  இணைந்தே வரும்.   இது உலக வரலாறு.
அதற்காக எதிரியை மறந்து விடுவதோ நம்மவர்களை குறை கூறிக்கொண்டிருபதோ
விடுதலைக்கு எந்த வகையிலும் உதவாது.

இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர் தலைவர்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து
எப்படி சூழ்நிலைக்கேற்ப செயல் பட்டு வருகிறார்கள் என்பதை உணர்ந்தாவது இங்கு
உள்ள தலைவர்கள் திருந்தட்டும்.